வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் பொலிஸாரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் அழிக்க வைத்துள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் சுவரோவியங்களை இளையோர் கீறி வருகின்றனர். அதற்கு பல தரப்பினரும் ஆதரவு நல்கி வருவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக வரைய முனைந்துள்ளனர்.
புலியின் படத்தினை வரைந்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு பொலிஸாருடன் வந்த புலனாய்வு பிரிவினர் புலிப்படம் கீற முடியாது. இதனை யாரு கீற சொன்னார்கள் ? யாரின் அறிவுறுத்தலின் கீழ் இதனை கீறுகிறீர்கள் ? என அச்சுறுத்தும் தொனியில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், உடனடியாக கீறிய படத்தினை அழிக்க கூறி, படம் அழிக்கும் மட்டும் அவ்விடத்தில் புலனாய்வாளர்கள் நின்றுள்ளனர்.
அங்கிருந்து செல்லும் போது அவ்விடத்தில் நின்ற இளையோர் மற்றும் படம் வரைந்தவர்களின் பெயர் விவரங்கள் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்து சென்றனர்.
தென்னிலங்கையில் போர் வெற்றி சின்னங்கள் மற்றும் இராணுவத்தினரின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ள போதிலும் இங்கே ஒரு புலியின் ஓவியத்தை வரைய முனைந்ததற்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை விரும்பத்தகாத செயல் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.