வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் 30,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீட்டை செலுத்த வேண்டும் எனவும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16ம் திகதி வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரை அதிகாலை 03.00 மணிக்கு கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, 35 வயது நிரம்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறநாட்டுக்கு தப்பிச் சென்று அங்கு மறைந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் இல்லாமலேயே நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு, நேற்று வழங்கப்பட்டது.
நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:
பதினாறு வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைப் பாதுகாவலரின் அனுமியின்றி அழைத்துச் செல்வது ஆட்கடத்தல் குற்றமாகும். அதேநேரம், 16 வயதுக்குக் குறைந்த சிறுமியை அவருடைய சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ உடல் உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தண்டனைச் சட்டக் கோவை கூறுகின்றது.
இந்த வழக்கில் சம்பவ தினத்தன்று அதிகாலை 03.00 மணிக்கு 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியை கடத்தி எதிரி ஆட்கடத்தல் குற்றம் புரிந்துள்ளார். அத்துடன் 16 வயதுக்குக் குறைந்த அந்த சிறுமியுடன் உடலுறவு கொண்டதன் மூலம் பாலியல் வல்லுறவு குற்றத்தையும் புரிந்துள்ளார்.
விசாரணையின்போது சாட்சியங்களின் மூலம் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய இரண்டு குற்றங்களையும் எதிரி புரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எதிரியைக் குற்றவாளியாகக் கண்டுள்ள இந்த நீதிமன்றம் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா அபராதமும், விதிப்பதோடு, அபராதத்தைக் கட்டத்தவறினால் ஒர் ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கின்றது.
பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுமியுடன் உடலுறவு கொண்டதன் மூலம் பாலியல் குற்றம் புரிந்தமைக்காக பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீடு செலுத்த வேண்டும். தவறினால் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
குற்றம் சாட்டப்பட்ட எதிரி இந்தியாவில் இருப்பதாக மன்றில் சாட்சியமளிக்கப்பட்டிருப்பதனால், சர்வதேச பொலிசாரின் ஊடாக அவரைக் கைது செய்யுமாறு பகிரங்கப் பிடியாணை பிறப்பித்து பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடப்படுகின்றது.
அதேபோன்று சார்க் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையைப் பாவித்து, இந்தியாவில் உள்ள எதிரியை நாடு கடத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்து எதிரியை இலங்கைக்கு நாடு கடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.