நன்னீர் கிணறு கழிவுநீர் தொட்டியாக மாற்றம்! பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

வல்வெட்டித்துறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறினை காவல் நிலைய கழிவு நீர் தேக்கி வைக்கும் குழியாக மாற்றி வைத்திருப்பதால் கிணறு மாசடைந்து காணப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வல்வெட்டிதுறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறில் காவல்துறை நிலையத்தில் இருந்து சமையல் கழிவுகள் மற்றும் குளியல் அறை கழிவுகளை தேக்கி வைக்கும் தொட்டியாக நன்னீர் கிணற்றினை மாற்றி வைத்திருக்கிறார்கள். இதனால் கிணறு மாசடைந்து நுளம்புகள் பெருகும் இடமாக காணப்படுகிறது.

அத்துடன் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தக்கூடும் எனவே இதனை மூடுவதற்கோ அல்லது அதனை துப்பரவு செய்வதற்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவிக்கையில் இது நிலத்தடி நீரினை மாசடைய செய்யும். எனவே இதனை மூடுவதற்குரிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். ஏன் இவ்வளவு காலமும் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஸ்டனிஸ்டர்ஸ் தெரிவிக்கையில், இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அக்கிணற்றினை துப்பரவு செய்வதற்குரிய நவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Related Posts