வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் புரிவோருக்கும் பெரும் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட கைகலப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் காயமடைந்தனர். நேற்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சிறுதொழிலில் ஈடுபட்ட ஆதிகோயிலடியைச் சேர்ந்த சிவகுரு செல்லத்துரை (வயது68), அவரது பிள்ளைகளான சித்திவிநாயகம் (வயது42), செல்லக்கணபதி (வயது40) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. கட்டுமரங்களில் சென்று தொழில் புரியும் மீனவர்களின் வலைகள் இழுவைப்படகுகளால் அறுக்கப்படும் சம்பவங்கள் வடமராட்சியில் அடிக்கடி ஏற்படுகின்றன.
நேற்றும் இவ்வாறு இழுவைப்படகுகள் சென்றவேளை கட்டுமரத்தில் சென்ற மீனவர்கள் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். மீறிச் சென்ற இழுவைப்படகுகளால் கட்டுமரங்களின் வலைகள் அறுக்கப்பட்டன என்று சிறுதொழில் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுச் சிறுதொழிலில் ஈடுபட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகினர் என மீனவர் சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது சமாதானமாகச் செல்லுமாறு பொலிஸார் பணித்தமையால் தாம் மீனவர் சங்க சமாசத்திடம் முறையிடவுள்ளனர் என்று அந்தப் பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.
வடமராட்சி கடற்பரப்பில் இழுவைப்படகுத் தொழிலுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள போதும் சட்டவிரோதமாக சிலர் அந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.