அழகான பெண்போல பாவனை செய்து, இளைஞனொருவனைத் தன் வலைக்குள் வீழ்த்தி, அவரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தை கறந்தவர் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் குழுவொன்று ஈடுபடுவதாக நீதவானின் கவனத்துக்கு, இரகசிய பொலிஸார் கொண்டுவந்ததையடுத்தே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
முறைப்பாட்டாளர் இராணுவ வீரர் என்றும், அவருடன் முகப்புத்தகத்தில் தொடர்பினை ஏற்படுத்தி, அத்தொடர்பை நீண்ட நாட்களுக்கு பேணி, அவருடைய நிர்வாணப் படங்கள் மற்றும் நிர்வாணமான வீடியோக்களை பெற்று, அவற்றை இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தியே, அவரிடமிருந்து இருவேறு சந்தர்ப்பங்களில் இரண்டு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய், கப்பமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
ஒரு குழுவாக செயற்பட்டே, குறித்த முறைப்பாட்டாளரிடம் இருவேறு சந்தர்ப்பங்களிலும் வங்கி கணக்குகள் இரண்டின் ஊடாக பணம் கறக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர், தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்