வலைப்பந்தாட்டத்தில் வலிகாமம் பாடசாலைகள் ஆதிக்கம்

netball-signவடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் 2 முதலிடங்கள் 2 இரண்டாமிடங்கள் மற்றும் 2 மூன்றாமிடங்கள் பெற்று யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

முதலாம், இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முடிவுற்ற நிலையில் மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் ஓமந்தை மத்திய கல்லூரியில் புதன்கிழமை (04) முதல் இடம்பெற்று நேற்று வியாழக்கிழமை (05) இறுதிப்போட்டிகள் இடம்பெற்றன.

15 வயதுப்பிரிவுப் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும் அராலி சரஸ்வதி வித்தியாலய அணியும் (வலிகாமம்) மோதின. போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றமையினால் இறுதி வரை வெற்றியாளர் புதிராகவே இருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் அபாரமாக ஆடிய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி 12:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.

மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் அணி 18:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் மன்னார் ஆண்டாங்குளம் மகா வித்தியாலயத்தினை வீழ்த்தியது.

17 வயதுப்பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் அராலி சரஸ்வதி வித்தியாலய அணியினை எதிர்த்து பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மோதியது. இதில் அபாரமாக ஆடிய அராலி சரஸ்வதி அணி 24:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.

மூன்றாமிடத்திற்கான போட்டியில் சுழிபுரம் விக்டோரியா அணி 27:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் மன்னார் புனித ஜோசப் வித்தியாலயத்தினை வீழ்த்தியது.

19 வயதுப்பிரிவினருக்கிடையிலான இறுதிப்போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியினை எதிர்த்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி மோதியது. இதில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 28:20 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

மூன்றாமிடத்திற்கான போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அணி 29:21 என்ற புள்ளிகள் அடிப்படையில் மன்னார் முருங்கன் மகா வித்தியாலய அணியினை வீழ்த்தியது.

Related Posts