வலுவிழந்தோருக்கு உதவுங்கள்; விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் கோரிக்கை

விசேட தேவையுடையோரின் இன்னல்கள், இடையூறுகளை எடுத்துக்கூறி எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது தேவைகளை நிறைவேற்ற எம்முடன் கைகோர்த்து நின்று செயற்படுங்கள். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் வி.கனகசபை இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச விசேட தேவைக்குட்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

விசேட தேவையுடையவர்களுக்கு தேவைகள் பல உள்ளன. இந்த நிகழ்வுக்குப் பலரை அழைத்திருந்தோம். சிலரே வருகை தந்துள்ளனர். அநேகர் வரவில்லை. எமது துயரங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. எமக்குள்ள இடைஞ்சல்களை, இன்னல்களை எடுத்துக்கூறி எமது வாழ்வு சிறக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது செயற்பாடுகளுக்கு வளர்முக நாடுகளில் இருக்கும் இடையூறுகள் தவிர்க்கப்பட வேண்டும். எமது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு எம்முடன் கைகோர்த்து நின்று செயற்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், எமது திறமைகளை வெளிக்கொணர உதவவேண்டும். விசேட தேவையுடையோர் வினைத் திறனுள்ளவர்கள். அவர்கள் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்று கூறினார்.

Related Posts