வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான கால வரையறையை மிக விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘வலி. வடக்கு பலாலி வீதியில் இராணுவக் குடியிருப்பு என்ற பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. அந்த பெயர்ப்பலகைக்கான அர்த்தம் என்ன?. இதுவரையில் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்காத அரசாங்கமும், இராணுவமும் இன்று கால அவகாசம் கோருவது எதற்காக?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
‘வலி. வடக்கின் முழு பிரதேசத்தினையும் அபகரிப்பதனால் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. நலன்புரி முகாம்களில் இருப்பவர்களின் விபரங்களை ஒரு நாளில் எடுக்க கூடிய இராணுத்தினரால், வலி. வடக்கு மீள்குடியேற்ற மக்களின் விபரம் இல்லை என கூறுவது வேடிக்கையான விடயம் எனவும், இராணுவம் உயர் பாதுகாப்பு வலயத்திற்கென சிறிய இடத்தினை எடுத்துக்கொண்டு மிகுதி இடத்தினை விடுவிக்க வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘தான், நலன்புரி முகாம்களில் இருப்பவர்களை அண்மையில் சந்தித்த போது, அவர்கள் தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், தாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் முன்பு மயிலிட்டி துறைமுகம் தன்னிறைவு பொருளாதாரத் துறைமுகமாக விளங்கியதாகவும் அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக’ அவர் கூறினார்.
‘இடம்பெற்று முடிந்த வடமாகாண சபையில் நான் போரால் பாதிக்கப்பட்ட பெண் என்பதாலும் இறுதிப் போரின் சாட்சியம் என்பதாலும் ஜெனீவா செல்லலாம் என்று முதலமைச்சரால் கூறப்பட்டது. இருந்தும் ஜெனீவா செல்வது தொடர்பாக எந்தவொரு முடிவும் நான் எடுக்கவில்லை.
இடம்பெறவிருக்கும் ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு நான் செல்வது தொடர்பாக பல கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நான் மக்களின் அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு முடிவுகளையும் எடுக்கமாட்டேன். அந்த வகையில் ஜெனீவா பயணம் தொடர்பாக எந்தவொரு முடிவும் நான் எடுக்கவில்லை’ என்றார்.
‘மேலும், காணாமற்போனோர் தொடர்பில் அரசு சொற்ப அளவு விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் பல அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணையின் போது, இராணுவத்தினரால் மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
வீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர் தாமும் விசாரணைக்குழு என்று கூறி, மக்களிடம் டோக்கன் வழங்கி இதனை கொண்டு வந்தால் மட்டுமே பதிவுகள் இடம்பெறும் என்று கூறி, மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, 05 பேரூந்துகளில் மக்களை வேறு இடங்களுக்கு ஏற்றிச் சென்று, 7 பேருக்கு 1 இலட்சம் ரூபா வீதம் காசோலை வழங்கியதுடன், அத்தியாவசியப் பொருட்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.
இப்படியான செயற்பாடுகளுக்கு மக்கள் ஒத்துப் போகாது அனைவரும் காணாமற்போன உறவுகள் தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும். ஜெனீவா பேச்சு இடம்பெறவிருக்கும் தருணத்தில் அனைவரும் எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘வலி. வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் அரசு இன்னமும் கால எல்லை வழங்குவது ஏமாற்று வேலை. இது தொடர்பாக சர்வதேசத்திற்கு திரிபுபடுத்தப்பட்ட செய்தியை அரசு வழங்குகின்றது’ என்று அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் – யாழ். இராணுவத் தளபதி