வலி வடக்கு மீள்குடியேற்றம் : இராணுவத்தையும் உள்ளடக்கிய குழு தகவல் சேகரிப்பில்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களின் காணிகள் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அவர்களின் காணிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தனியான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்தக் குழு ஒரு வாரத்துக்குள் தரவுகளை சேகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் இதன் பின்னர் அவரது பணிப்புக்கு அமைய உடனடியாக மீள்குடியேறற் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் நேற்று நடந்தது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முப்படைத் தளபதிகள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இக் கூட்டம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் இன்னமும் மீள்குடியேறாமல் முகாம்களில் உள்ளவர்களின் புள்ளிவிபரங்களை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலாக இருந்தது.

இதன்படி யாழ்.மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் எந்தெந்த கிராம சேவகர் பிரிவுகளி்ல் எவ்வளவு காணிகள் மீள்குடியேற்றம் இடம்பெறாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என்பது தொடர்பான புள்ளி விபரங்களளையும் இன்னமும் மீள்குடியேறாமல் முகாம்களில் வசிக்கும் மக்கள் தொடர்பான புள்ளி விபரங்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளிடம் கையளித்தோம்.

இது தவிர குறி்த்த புள்ளிவிபரங்களை மேலும் துல்லியமாக கணிப்பதற்கு ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் ஒவ்வொரு குழுவை நியமித்து தரவுகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் இராணுவத்தினரும் புதிய குழுவுடன் இணைந்து செயற்படும். இந்தக் கலந்துரையாடல் முக்கியமாக இவ்வாறான தரவுகளை பெற்றுக்கொள்வதற்காகவே கூட்டப்பட்டது. அமைக்கப்பட்டுள்ள புதிய குழு ஒரு வாரத்துக்குள் முழுமையான தரவுகளைப் பெற்று அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. என அரச அதிபர் தெரிவித்தார்.

Related Posts