வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

Defence-Secretary-Gotabayaவலி. வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சின் முக்கியஸ்தர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலக முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, வலி. வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சின் பிரதி செயலாளரினால் யாழ். மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று கடந்த மாதம் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலில், மீள்குடியேற்ற அமைச்சின் பிரதிச் செயலாளர் யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடி மீள்குடியேறவுள்ள மக்களின் புள்ளிவிபரங்களை திரட்டிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts