வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்ற துரிதகதியில் நடவடிக்கை

dak-suntharam-arumainayagam-GAவலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுடைய காணிகளுக்கு பதிலாக வளலாய் பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.

அதன்போதே வலி.வடக்கு காணி மதிப்பீடு தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அரச அதிபர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வலி.வடக்கு மக்களை வளலாய் பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த இராணுவ ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள காணிகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மதிப்பீட்டின் பிரகாரம் மாற்றுக்காணியில் குடியேற்றுவதுடன் இழந்த காணிக்கான நட்டஈடும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வளலாய் பகுதியில் ஏற்கனவே குடியிருக்கும் 52 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு இருக்க முடியாமல் தற்போது வெளியேறிவருகின்றனர். அவ்வாறான நிலையில் வளலாயில் காணி வழங்குவது என்பது எவ்வாறு நியாயம் என பல தரப்பினரும் கேள்வியெழுப்பிள்ளனர். மேலும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 24 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்பவர்கள் பல அவலங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் என்பது சாத்தியம் இல்லை என்று இராணுவ கட்டளைத்தளபதி உதயப்பெரேரா உறுதிபடதெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டம். அதனையே நடைமுறைப்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் வாழும் மக்களில் மாற்றுக் காணிகள் பெறவிரும்புபவர்கள், நட்ட ஈடு பெற்றுக் கொள்ள விரும்புபவர்களுடைய விபரங்களும் திரட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுக் கிராமம் ஒன்று வளலாயில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக வலி.வடக்கில் உள்ள மக்களுடைய காணிகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts