வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி

valy-vadakku-north-tellippalai-armyவலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராணுவத்தினர் முன்வைத்துள்ளனர்.

இருப்பினும் குறித்த யோசனையை எதிர்த்த மக்கள், காணிகளை சுவீகரிப்பதென்றால் எவ்வளவு காணிகளைச் சுவீகரிக்கப் போகின்றீர்கள் என்பதை அறிவியுங்கள். அதன் பின்னர் மீள்குடியமர்வு தொடர்பான கலந்துரையாடலுக்கு நாம் வருகின்றோம் என்று இராணுவத் தளபதியிடம் நேரடியாகத் தெரிவித்தனர்.

வலி.வடக்கு நலன்புரி நிலையத் தலைவர்கள், மீள்குடியேற்றக் குழுவினர் உள்ளடங்கலாக 35 பேர், வலி. வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவுடன் நேற்றுக் கலந்துரையாடல் நடத்தினர்.

சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தக் கலந்துரையாடலில் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

மிள் குடியமர்வு தொடர்பில் இராணுவத்தினர் ஆரம்பத்தில் தெரிவித்த நிலைப்பாட்டிலிருந்து தற்போது பின் வாங்கியுள்ளனர் என அவர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிவதாகக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

குடியேற்றத் திட்டம்

யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கும், வலி.வடக்கு மக்களுக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

இதற்கமைய வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பான பதிவுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு நிலையிலேயே நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில், வலி.வடக்கில் காணியற்றவர்களை மாதிரிக் குடியேற்றம் அமைத்துக் குடியேற்றுவது தொடர்பில் இராணுவத்தினரால் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர், விமானநிலையம், துறைமுகம் என்பவற்றுக்குக் காணி சுவீகரிப்பதால் பாதிக்கப்படும் மக்களுக்கும் குடியேற்றம் அமைப்பது தொடர்பில் இராணுவத்தினரால் பிராஸ்தாபிக்கப்பட்டது.

காரசாரமாக விவாதம்

இதன்போது மக்கள், நீங்கள் காணியுள்ளவர்களை முதலில் குடியமர்த்துங்கள். அத்துடன் எவ்வளவு காணியைச் சுவீகரிக்கப் போகின்றீர்கள் என்று அறிவியுங்கள் என்று கூறினர்.

இதற்கு இராணுவத்தினர், நாங்கள் அபிவிருத்தி வேலைகளுக்கே காணியைச் சுவீகரிக்கின்றோம் என்று பதிலளித்துள்ளனர். மக்களை அனுமதிக்காமல் யாருக்குக் கண்காட்சி காட்ட அபிவிருத்தி வேலைகளைச் செய்யப் போகின்றீர்கள் என்று மக்கள் பதில் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இனிமேல் மக்கள் கிளர்ந் தெழுந்தால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நலன்புரி நிலையத் தலைவர்கள் இராணுவத் தளபதியிடம் நேரடியாகத் தெரிவித்தனர். இதற்கு இராணுவத் தளபதி, நவநீதம்பிள்ளை இங்குவந்து ஒன்றும் பெற்றுத் தரப்போவதில்லை என்று தெரிவிக்க, எங்களுடைய காணியை வைத்திருப்பது நீங்கள், அதைக் கேட்கிறது நாங்கள்.இதில் வேறு யாரும் வரப்போவதில்லை.எங்களிடம் உயிர் மட்டும்தான் இருக்கின்றது. அதுவும் முடிவு காணாமற் போகாது என்று இராணுவத் தளபதியிடம் காரசாரமாகத் தெரிவித்தனர்.

இராணுவத்தினரைப் பொறுத்த வரை, எம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாமல் குடியேற்றத் திட்டங்கள் அமைத்து குடியேற்றவே நினைக்கின்றனர்.அவர்களின் பேச்சிலிருந்து அதனை விளங்கிக் கொள்ள முடிவதாகக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், இராணுவத் தளபதி ஆகியோருக்கு இடையில் கலந்துரை யாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Related Posts