வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்த புதிய அமைப்பு உதயம்

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் ஆலோசகர் கிருஸ்ணபிள்ளை மனோகரன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அணுசரணையடன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பாடி விருந்தினர் விடுதியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அந்தச் சந்திப்பின் போதே, குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டமை குறித்து தெரிவித்தார்.

நலன்புரி முகாம்களில் தமது வாழ்க்கையினைத் தொலைத்துவிட்டு இருக்கும் மக்களுக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு வலி.வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்சார்ந்து மற்றும் தேவைகள் சார்ந்தும் இயங்கவுள்ளது.

இந்த அமைப்பில் ஆலோசகர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியத்தின் தலைவராக திரு. ரட்ணராஜாவும், செயலாளராக விஜிதாவும், பொருளாளராகத் தவம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நீக்கும் முகமாக, என்னென்ன வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமோ, அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் உறுதியளித்தனர்.

25 வருடங்களாகத் தமது வாழ்க்கையினைத் தொலைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாது. நலன்புரி முகாமிற்குள் தமது வாழ்க்கையினைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அந்த மக்களின் துன்பங்களையும், தேவைகளையும் நீக்கும் முகமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி, வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் வலி.வடக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அழுத்தங்களைக் கொடுக்கவுள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்

Related Posts