வலி. வடக்கு பிரதேசங்களை ஜனாதிபதி நேரடியாக பார்வையிட வேண்டும்!

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசங்களின் நிலைமைகளை நேரடியாக பார்வையிட வேண்டும் என தையிட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலி. வடக்கில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் தமது காணிகள் மற்றும் வீடுகள் அனைத்து வளங்களுடன் காணப்பட்டதாகவும் தற்போது தங்களது வீடுகள் உடைக்கப்பட்டு, பற்றைக்காடாக காட்சியளிப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் குறைதீர்க்கும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில் யுத்தம் காரணமாக வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 25 வருடங்கள் கடந்த போதிலும் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் தமது, காணிகள் மற்றும் வீடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். விஜயத்தின் போது நேரடியாக பார்வையிட வேண்டும் என்றும் தையிட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் ஒரு குடும்பமாக இடம்பெயர்ந்த நிலையில், தற்போது தமது குடும்பம் மூன்று குடும்பங்களாக உள்ளதனால், வீடுகளை அமைப்பதற்கு காணி தேவைப்படுவதாகவும் யாழ்ப்பாணம் – தையிட்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts