வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் சிறிய பகுதியை விடுவிக்க இணக்கம்

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் சொந்த இடங்களில் ஒரு சிறிய தொகுதியை விடுவிக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது.

கீரிமாலை நகுலேஸ்வரம் பகுதியில் உள்ள மக்களுடைய சில வீடுகள் உள்ளடங்கிய வசாவிளானில் இருந்து வளலாய் வரைச் செல்லும் செமன்றி வீதி, சாந்தைச் சந்தியுடன் தொடுகையுறும் வீதிகள் மற்றும் அதனை அண்மித்த 27 ஏக்கர் நிலப்பகுதி ஆகியவையே விடுவிக்கப்படவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்தத் தகவலை யாழ்.மாவட்டச் செயலகம் உறுதி செய்துள்ளளது.

பலாலி இராணுவ தலமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்குறிப்பிட்ட பகுதிகள் உட்பட மக்களுடைய குடிமனைகளுடன் கூடிய பகுதிகளை விடுவிக்குமாறு மாவட்ட அரச அதிகாரிகள் இராணுவத்தரப்பினரிடம் வலியுறுத்தியிருந்தனர்.

அரச அதிகாரிகளினால் மீள்குடியேற்றத்திற்கு வலியுறுத்தப்பட்டவற்றில் குறிப்பிட்ட மிகச் சிறிய பகுதிகளை மட்டும் விடுவிப்பதற்கு இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி இனங்கானப்பட் பகுதிகளை விடுவித்து மக்களிடம் கையளிப்பதற்கான செயற்பாடுயாழ்.மாவட்டச் செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி வடமராட்சியில் இருந்து தெல்லிப்பளை வரைச் செல்லும் வல்வை – அராலி வீதியில் விடுவிக்கப்படாமல் உள்ள பகுதிக்குப் பதிலாக வசாவிளான் பாடசாலைக்கு முன்பாக உள்ள வடமூலை தேவாலையத்தில் இருந்து வளலாய் சிஸ்ரர் மடம்வரைக்கும் செல்லும் செமென்றி வீதி விடுவிக்கப்படவுள்ளது.

குறித்த வீதியுடன் இணைந்த 27 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன் சாந்தைச் சந்தியில் 150 மீற்றர் தூரமும், மடம் வீதியில் 7 கிலோமீற்றர் தூரமும் விடுவிக்கப்படவுள்ளது. என்று யாழ்.மாவட்டச் செயலகத்தின் உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லாமல் கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் மக்களுடைய பெறுமதி மிக்க வீடுகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியையும் விடுவிப்பதாக கடற்படையினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

குறித்த படைமுகாம் அமைந்துள்ள பகுதி விடுவிக்கப்படவுள்ளதால் அப்பகுதியில் வீடுகள், காணிகளின் உரிமையாளர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts