வலி.வடக்கு, கிழக்கு பகுதிகளில் 700 ஏக்கர் காணி விடுவிப்பு!

வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

tellippalai-1

யாழ்ப்பாணம், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில் சென்று ஆவலுடன் பார்வையிட்டனர். இவர்களுடன் வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், அப்பகுதி கிராம அலுவலர்கள் ஆகியோர் சென்றிருந்தனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 6ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்தில் ஒருபகுதி நிலம் கடந்த தை மாதம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டமாக வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம் நேற்று மீள்குடியேற்றதுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. வலி.வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளலாய் பகுதி அதாவது வலி.கிழக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts