இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் மரிக்கோ யமமொடோ, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு, வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மீள்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரச உதவிகள், முகாம்களில் எவ்வளவு காலம் இருந்தமை என்பது தொடர்பிலும் கேட்டறிந்தார். மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசுக்கும் முன்னைய அரசுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொடர்பிலும் வினாவினார்.
‘இரண்டு அரசாங்கமும் ஒரே அரசாங்கம் என்றும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகச் செய்த விடயங்களை இந்த அரசாங்கம் மறைமுகமாகச் செய்கின்றது’ என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் எஸ்.சஜீவன், ஜப்பான் அரசியல் ஆலோசகருக்குத் தெரியப்படுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் இன்னமும் 34 நலன்புரி முகாம்கள் இருப்பதுடன், 9 ஆயிரத்து 948 இன்னமும் மீள்குடியமர்த்தப்படவேண்டியுள்ளதாகவும் கூறினார். அத்துடன் மக்களின் தொழில் மார்க்கங்கள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் தொடர்ந்து இருப்பதுடன், வியாபாரங்களையும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக சஜீவன் மேலும் தெரியப்படுத்தினார்.
தொடர்ந்து, வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி முகாமில் வசித்து வரும் மக்களையும் அரசியல் ஆலோசகர் சந்தித்து கலந்துரையாடினார்.