வலி.வடக்கில் மேலும் 700 ஏக்கர் காணி ஓரிரு வாரத்தில் விடுவிக்கப்படும்

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் இன்னமும் தம்வசம் வைத்துள்ள காணிகளில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்தும் அடுத்து வரும் ஒரு வருட காலப்பகுதிக்குள் மக்களிடம் கையளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்கு முன்னர் அவற்றை விடுவிப்பதற்கான கால அட்டவணை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிவில் அதிகாரிகளிடம் நேற்றுத் தெரிவித்தார்.

இதன் முதல் கட்டமாக அடுத்த ஓரிரு வாரங்களில் மேலும் 700 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் என்றும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகள் பலாலிக்கு நேற்று வருகை தந்தனர். எதிர்வரும் வாரங்களில் விடுவிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்ட 700 ஏக்கர் வரையான நிலப்பரப்பை அவர்களுக்கு அடையாளம் காட்டினார்.

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி அதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களில் சொந்தக் காணிகள் இல்லாதவர்களை ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள அரச காணிகளில் துரிதமாக குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அப்போது பாதுகாப்புச் செயலாளர் அரச அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் குறிப்பிட்டார். எனினும் இதில் எவ்வளவு நிலப்பரப்பு விடுவிக்கப்படும் என்ற விபர்தை அவர் தெரிவிக்கவில்லை.

Related Posts