வலி வடக்கில் மேலும் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க அனுமதி

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மேலும் 700 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ளதாக யாழ்.அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை, கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆகிய பிரதேசங்களில் காணப்படும் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 26 வருடங்களுக்கு மேல் இராணுவத்தினரின் பிடியில் காணப்படும் வலி வடக்கின் சுமார் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக அண்மையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த காணிகளை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், சில காணிகளை காலம் தாழ்த்தி விடுவிப்பதாகவும், இராணுவத்திற்கு அவசியமான காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கான நட்டஈடு வழங்கப்படும் என்றும் யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய அண்மையில் யாழ்.அரச அதிபர் கடிதமொன்றை அனுப்பியிருந்தமையானது பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளதோடு, இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts