வலி. வடக்கில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் தகவல் இல்லை: அரச அதிபர்

suntaram-arumainayakam4யாழ்.மாவட்டத்தில் வலி. வடக்கு உட்பட பல்வேறு பகுதிகளில், உயர்பாதுகாப்பு வலயங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வரும் நிலையில் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லை என அரசாங்க அதிபர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

நேற்று காலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அரசாங்க அதிபருடனான சந்திப்பின் போது மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்களுடைய எண்ணிக்கை என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

ஒரு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்றபோது, உத்தேசிக்கப்பட்டளவு மக்கள் மீள்குடியேற்றத்திற்கு வருவதில்லை. அவர்கள் வேறு மாவட்டங்களில் அல்லது வேறு நாடுகளில் இருக்கின்றார்கள் எனவே மீள்குடியேற்றப்படவேண்டிய மக்கள் தொகை குறித்து தம்மிடம் தகவல் இல்லை என குறிப்பிட்டார்.

ஆனால் வலிகாமம் வடக்கில் 24 கிராமசேவகர் பிரிவுகளில் 28ஆயிரத்து 600வரையான மக்கள் தம்மை மீள்குடியேற்ற வலியுறுத்தி தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் தங்களுடைய காணி உறுதிகளை சமர்ப்பித்து பதிவு செய்திருக்கின்றனர்.

இதனையே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அண்மையில், யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

இந்நிலையில் பிரதேச செயலகம் தகவல் திரட்டியுள்ளது, அதைவிட யுத்தம் நிறைவடைந்து 4 வருடங்களாகின்ற நிலையில் மாவட்டத்தில் எந்தெந்த பிரதேசங்களில் எத்தனையாயிரம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இன்னும் எத்தனையாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட வேண்டியிருக்கின்றது போன்ற தகவல்கள் மாவட்டச் செயலகத்திடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் மீள்குடியேற மக்கள் முழுமையாக வருவதில்லை.

எனவே மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்கள் தொடர்பில் தம்மிடம் தகவல் இல்லை என அரசாங்க அதிபர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

இதேவேளை வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவரும் முகாம்களை அந்தந்த பிரதேச செயலர் பிரிவில் பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மேலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக கூறி அந்த மக்களுக்கு கடந்த 2வருடங்களாக நிவாரணமும் வழங்கப்படாத நிலையில் மிகப்பெரிய வாழ்வாதார நெருக்கடியுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கே ட்டபோது அது தொடர்பிலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும் குறித்த விடயம் தொடர் பில் பிரதேச செயலர்களுடன் தொடர்புகொண்டு தாம் அறிவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அரசாங்க அதிபர் ஆசனத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts