வலி.வடக்கில் மீள்குடியேற்றம் படிப்படியாக மேற்கொள்ளப்படும் : உதயபெரேரா

‘யாழ்.மாவட்டதில் இடம்பெயர்ந்துள்ள மக்களை படிப்படியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் உதயப்பெரேரா மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.

2014_01_11_5

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களின் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மல்லாகம் கோணப்புலம் நவன்புரி முகாமில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது, ‘வலிகாமம் வடக்கில் இடம்பெயர்ந்து கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு நலன்புரி நிலையங்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலேயே தொடர்ந்தும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றோம் எம்மை எமது இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலி.வடக்கிலிருந்த மக்கள் இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த அவர், யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை படிப்படியாக மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் இதுவே ஜனாதிபதியின் கொள்கையாகவும் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

இதேவேளை மீள்குடியேற்றப்படவேண்டிய மக்கள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொண்டதாக தெல்லிப்பளை பிரதேச செயலர் கே.சிறிமோகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட படைத் தலைமையகத்தினால் நல்லிணக்க புலமைப்பரிசில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மல்லாகம் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தில் வாழும் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான உதவு தொகையாக தலா 500 ரூபா சேமிப்புத்தகத்தில் வைப்பிலிடப்பட்டு, அதற்கான வைப்புப் புத்தகத்தினை யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா வழங்கினார்.

Related Posts