வலி வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வு

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து நேற்று புதன்கிழமை ஆராயப்பட்டுள்ளது.

maviddapuram

வலி வடக்கு மாவை கலட்டி மற்றும் நகுலேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் குறித்த பகுதி மக்களைச் சந்தித்து தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தின் குடிநீர் வசதிகள், வீடமைப்பு, மின்சாரம், வீதிப்புனரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது

நகுலேஸ்வரம் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் அப்பகுதி மலசலகூடம் அமைப்பதில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பகுதி கல்லுப் பூமி என்ற காரணத்தினால் மலசல கூடத்தின் குழி அமைக்க முடியாதுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ள எற்பாடு செய்யுமாறு பொதுமக்களினால் கோரிக்கை விடுத்தனர்.

கனரக வாகனங்களை பயன்படுத்துவது சட்டவிரோதமான விடயமாக இருப்பதால் இது குறித்து ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு முன்னால் உள்ள கீரிமலை பிரதான வீதிக்கு வடக்குப் பக்கமாக மலக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கேரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிறிமோகன் , ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க. கமலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கீரிமலை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்ல புதிய வீதி

கீரிமலை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்வதெற்கென புதிதாக அமைக்கப்பட்ட வீதி எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக பொது மக்களின் பாவனைக்காக மீளக்கையளிப்பதாக படைத்தரப்பு உறுதியளித்துள்ளது.

குறித்த ஆலயத்திற்கச் செல்லும் வீதி நீண்ட காலமாக கடற்படையினரின் பாவனையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருப்பதால் இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கு புதிய பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாதை எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்பதாக செப்பனிடப்பட்டு ஆலயத்தின் பயன்பாட்டிற்கு கையளிப்பதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த ஆலயத்திற்கான மின்சார விநியோகத்தை கடற்படையினர் வழங்கி வந்தனர். தற்போது கடற்படையினர் மின்விநியோகத்தை நிறுத்தியுள்ளதால் குறித்த ஆலயத்திற்கு மின்விநியோகம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையத்தில் உள்ளவர்களை கீரிமலையில் குடியேற்ற நடவடிக்கை

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை கீரிமலை மாவிட்டபுரம் பிரதான வீதியின் மேற்குப் புறமாக குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

22 வருடங்களுக்கு மேலாக தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய உயர் பாதுகாப்பு வலயமாக இன்னும் விடுவிக்கப்படாமல் நிலையில் உள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

குறிப்பிட்ட சில காலங்களில் இப்பிரதேசம் நிலஅளவை செய்யப்பட்டு பொதுமக்களிற்கு கையளிக்கப்படவுள்ளது. இவ்வாறு குடியேற்றப்படும் மக்களின் பிரதான தொழிலாக கடற்தொழில் அமைந்துள்ளதால் குடியேற்றம் செய்யப்படும் பகுதிக்கு அண்மையில் அவர்கள் கடற்தொழில் செய்வதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று பிரதேச செயலரினால் படைத்தரப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடற்படையினருடன் கலந்தாலோசித்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

Related Posts