வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாங்களில் உள்ளவர்களின், நிரந்தர முகவரியாக முகாங்களின் முகவரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இச் செயற்பாடானது யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அடையாளங்களை அழிக்கும் செயல் என்றும் மக்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கரவெட்டி பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள உடுப்பிட்டிப் பகுதியில் வாழும் மக்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வலி.வடக்குப் பகுதியில் உள்ள பலாலி, தையிட்டி, மயிலிட்டிப் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 120 குடும்பங்கள் உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள நலன்புரி முகாம் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கி வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் குடும்ப “இ” என அடையாளமிடப்பட்ட குடும்ப அட்டையே வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அம் மக்களுடைய குடும்ப அட்டைகள் மீளாய்வுக்கு என J/353, J/354, J/359 கிராம சேவகர்களால் சேகரிக்கப்பட்டு அவ்வட்டைகளில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகவரிகள் தவிர்க்கப்பட்டு அவர்களுக்கான நிரந்தர முகவரிகள் இடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்பாடானது யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்கள் இல்லை என்ற தோற்றப்படாட்டை வெளிக்காட்டிக் கொள்வதற்கும், இடம்யெர்ந்தது நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் என்ற அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாடாகும்.
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்களிடம் தங்களுடைய காணிகளுக்கான உறுதிகள் இல்லை. 1990 ம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் தற்போது பலம்பலடைந்து பல குடும்பங்களாக உள்ளன.
இடம்பெயர்ந்தவர்களுக்கான “இ” வகை குடும்ப அட்டை ஒன்றே இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் என்ற கணக்கெடுப்புக்கு ஒரு சாட்சியாக இருந்தது. அதுவும் தற்போது திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.
இதுதவிர இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடையாள குடும்ப அட்டை இருப்பவர்களுக்கே வீட்டுத்திட்டம் உட்பட வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்படும்.
எனவே வலி. வடக்கு மக்களுடைய “இ” குடும்ப அட்டை நீக்கப்பட்டு நிரந்தர வதிவிடத்தவர்களுக்கான குடுமப அட்டை வழங்கப்பட்டால் அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நெஞ்ச உதவிகளும் கைநழுவிப் போய்விடும்.
தமது சொந்த இடங்களிற்குச் சொல்ல முடியாமலும், இருக்கும் இடத்தில் எந்தவிதமான உதவிகளும் பெற்றுக் கொள்ள முடியாமலும் அந்தரிக்கும் நிலை ஏற்படும்.