Ad Widget

வலி.வடக்கில் மக்களை மீளக்குடியேற்றியதாக போலியான படம் காட்டுகிறது அரசு! சுரேஸ் பிரேமச்சந்திரன்

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக அரசாங்கம் போலியான படத்தை சர்வதேசத்திற்கு காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

suresh

வலிகாமம் வடக்கு பகுதியில் ஒரு தொகுதி மக்களின் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் குடியேற்ற வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய மொத்த காணிகளில் 2000 ஏக்கருக்கு அதிகமான காணிகள் விமான நிலையம் அமைப்பதற்கும், கடற்படையின் தேவைக்கும் சுவிகரிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்த செயற்பாடானது மக்களது காணிகளை அபகரித்து இராணுவ தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவுள்ளது.

விடுவிக்கப்பட்ட ஒரு தொகுதி நிலப்பரப்பிலும் விடுவிப்பதாக கூறிய வீதிகள் முற்றாக விடுவிக்கவில்லை. குறிப்பாக அராலி வல்லை வீதி அதேபோன்று மல்லாகம் கட்டுவன் வீதி முழுமையாக திறக்கப்படாது மக்களுடைய காணிகளை ஊடறுத்து புதிய வீதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது விமான நிலையம், மற்றும் கடற்படை முகாம் அமைப்பதற்கான காணிகளை சுவிகரிப்பதற்கு படையினர் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கான காணிகள் 1972 ஆம் ஆண்டு சுவிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய சுரேஸ் பிரேமசந்திரன், வலிகாமம் வடக்கில் உள்ள மேலதிகமான இராணுவத்தை வெளியேற்றுவதனூடாக மக்களது காணிகளை அவர்களிடமே மீளக்கையளிக்க முடியும் என குறிப்பிட்டார்.

அத்துடன் காணிப்பிரச்சனையானது யாழ்ப்பாணத்தின் ஏனைய பிரதேசங்களிலும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் மக்களிடம் இருந்து சுவிகரிக்கப்பட காணிகள் மக்களுக்கே திருப்பி கொடுக்கப்பட வேண்டும் எனவும் வீதிகளும் முழுமையாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட வேணடும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts