அடுத்த மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800 ஏக்கர் காணிகளிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான முன்னாயத்தங்கள் அரச அதிகாரிகளினாலும், இராணுவத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய வேலிகளை பின்னகர்த்தும்
இராணுவத்தினர், அங்குள்ள பற்றைக்காடுகளை அகற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 800 ஏக்கர்கா ணிகள் விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக பளைவீமன்காமம், நடேஸ்வரக்
கல்லூரியை அண்மித்த பகுதிகள் மற்றும் தல்சவென ஹோட்டல் பகுதிகளில் சுமார் 117.17 ஏக்கர் காணிகளில் படைமுகாம்கள் அமைந்துள்ளன. மேலும் 225.8 ஏக்கரின் சீமெந்து தொழிற்சாலை காணிகளும் உள்ளன. இந்நிலையில் விடுவிக்கப்படும் பகுதிகளில் மீதமாக உள்ள 460 ஏக்கர் பகுதிகளே மக்கள் மீள்குடியேறிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இவற்றிலும் அங்குள்ள படைமுகாம்களிற்காக பாதுகாப்பு தடைகள் அகற்றப்பட்டால் மட்டுமே முழுமையாக மக்கள் குடியேறிக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுத்தப்படும்.
இருப்பினும் விடுவிக்கப்படும் தையிட்டிப் பகுதியில் மக்கள்அதிகளவில் குடியமரக் கூடிய வள்ளுவர் குடியிருப்பு போன்ற பகுதிகள் விடுவிக்கப்படுவதால் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் பெரும்பாலனவர்கள் இங்கு மீள்குடியேறிக் கொள்ளக் கூடியநிலை ஏற்படுத்தப்படும்
இந்நிலையில் புதிதாக விடுவிக்கப்படவுள்ள காணிகளை உரிமையாளர்களிடத்தில் கையளிப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக வருகைதரவுள்ளார்.
இதன்போது வலி.வடக்கில் விடுவிப்பதற்காக இனங்காணப்பட்ட காணிகளையும் உரிமையாளர்களிடம்கையளிக்க நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.