வடக்கு மக்களின் காணிகளை அவர்களுக்கு விரைவாக வழங்கி மீள்குடியேற்ற வேண்டுமென தென்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மகஜரொன்றை அனுப்பவுள்ளனர்.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கருவலஸ்வெல மற்றும் இடங்களை சேர்ந்த தென்பகுதி மக்களை கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். அம்மக்கள் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களை சந்தித்து உரையாடினர்.
இச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் படும் கஷ்டங்களை நேரடியாக கண்ணுற்றதையடுத்தே தென்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்ப தீர்மானித்ததாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு இணைப்பாளர் ஜேசுதாசன் தெரிவித்தார்.
அதாவது முகாம்களிலுள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி குறுகிய இடத்தில் வாழ்வது கவலையடைகின்றோம் என தெரிவித்தே மேற்படி மகஜரை அவர்கள் அனுப்பவுள்ளதாக வடக்கு இணைப்பாளர் ஜேசுதாசன் குறிப்பிட்டார்.
அந்த மகஜரில் உடனடியாக மக்களின் காணிகள் அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டுமென்பதுடன் குறுகிய காலத்தில் குடியேற்றப்படும் வரை அவர்களுக்கு அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எப்படியான முறையில்குடியேற்றப்படுவது தொடர்பில் சிறந்த திட்டம் வெளிப்படுதல் மற்றும் நல்லிணக்கத்துக்கு தடையாகவுள்ள தடைகளை நீக்க வேண்டுமெனவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.