Ad Widget

வலி. வடக்கிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்

யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

petrole-kks

காங்சேசன்துறை பகுதி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் விடுவிக்காது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.

காங்சேசன்துறை பகுதியில் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், காங்கேசன்துறை வீதிக்கு அருகிலுள்ள தெல்லிப்பளை எம்.பி.சி.எஸ் இன் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த நிலையில், குறித்த பகுதி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள போதும், எரிபொருள் நிரப்பு நிலையத்தை விட்டு இராணுவத்தினர் வெளியேறவில்லை.

தொடர்ந்தும் அதனை தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்துள்ளதாகவும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்தில், அதனைச்சூழ முட்கம்பிகளால் பாதுகாப்பு வேலிகளை அமைத்து வருகின்றனர்.

கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகள் தற்போது பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு உரியவற்றை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுவித்த பகுதிகளின் மீள்குடியேற்றம் கூட முழமையடையாத நிலையிலே, காணப்படுவதாகவும் வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Posts