வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்கிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.
2012 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியில் இருந்து வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கான ஒதுக்கப்பட்ட நிதிகளை கடந்த 2 ஆம் திகதி கையளிக்கும் போதே பொதுமக்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
இதன் போது சுழிபுரம் காட்டுப்புலம் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுழிபுரம் திருவடிநிலை சைவத்தமிழ்க் கலவன் பாடசாலையை மீண்டும் பழைய இடத்தில் இயக்க வைப்பது தொடர்பாகவும், பாடசாலையின் புனரமைப்புத் தொடர்பாகவும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
பாடசாலையின் பழைய இடத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் அராலி கிழக்கு மயானப் புனரமைப்புக்கென ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியையும், அம்பாள் சனசமூக நிலைய கட்டட புனரமைப்புக்கென 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதியையும், அராலி தெற்கு அம்பாள் சனசமூக நிலையத்தின் தலைவர் ச.சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது கையளித்தார்.
இதனைவிட சுழிபுரம் பாணாவெட்டி பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்கத்தின் கட்டடத்துக்கு மின்சார வசதிக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கி இருந்ததை அடுத்து மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், கட்டடத்துக்கான மின் விநி யோகத்தை சம்பிராதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் சித்தன்கேணி பிரதேசத்தில் புனரமைப்புக்கென ஒரு இலட்சம் ரூபா நிதியையும், சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகத்துக்கென மின்பிறப்பாக்கி ஒன்றையும் கையளித்தார்.