வலி.கிழக்கு பிரதேச சபை பிரச்சினைக்கு முதலமைச்சர் நடவடிக்கை

vicky0vickneswaranவலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளரது பொறுப்புக்களை, சபையின் செயலாளருக்கு தற்காலிகமாக பாரப்படுத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றார் என்று தெரியவருகின்றது.

வலி.கிழக்குப் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு தவிசாளர் அ.உதயகுமார் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் வலி.கிழக்குப் பிரதேச சபையின் ஆளுங்கட்சியான தமிழரசுக் கட்சி தனது கட்சிசார்பில் புதிய தவிசாளரின் பெயரைப் பிரேரிக்கவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கும் நிலையை எதிர் நோக்கியிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் சபையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது இழுத்தடிக் கப்பட்டிருந்தது. இதன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாத்திரம் சபையின் செயலாளருக்கு முதலமைச்சர் வர்த்தமானியினூடாக அதிகாரம் வழங்கியிருந்தார்.

இருப்பினும் ஏனைய அதிகாரங்கள் பாரப்படுத்தப்படாமையினால் சபையின் செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்பட முடியாத சூழ்நிலையே காணப்பட்டது. அத்துடன் சபையின் மாதாந்தக் கூட்டங்களும் நடைபெறாததுடன் சபையின் தவிசாளரால் தனது பதவிநீக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் முதலமைச்சரின் செயலாளரினால், சபையின் செயலாளருக்கு கடந்த 28 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில், தவிசாளரின் நிர்வாகப் பொறுப்புக்களை செயலாளருக்கு பாரப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை சபையொன்றின் தவிசாளர் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு நீக்கப்பட்டால், அந்தக் கட்சி புதிய தவிசாளரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சரால், அந்தப் பகுதி உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு சபைத் தவிசாளரின் பொறுப்புக்கள் பாரப்படுத்தப்பட வேண்டும். ஏனைய மாகாணங்களில் இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருகின்றபோதும், முதலமைச்சர் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தனது தற்துணிவு அதிகாரத்துக்கு அமைய செயலாளருக்கு அதிகாரங்களைப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது.

Related Posts