வலிவடக்கில் இராணுவ முகாமுக்காக 70ஏக்கர் நிலம் அபகரிப்பு!

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களுடன் இராணுவத்தினரும் இருப்பர் என அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70ஏக்கர் நிலத்தினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வலிகாமம் வடக்கில் 454 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. விடுவிக்கப்படும் பிரதேசத்தின் நடுவில் இராணுவ முகாம் இருக்கும் என இராணுவத்தினரால் ஏற்கனவே மக்களுக்கு கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து, காங்கேசன்துறையில் 40ஏக்கரில் ஒரு இராணுவமுகாமும், தையிட்டியில் 70 ஏக்கரில் ஒரு முகாமும் இருக்குமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு படைமுகாம்களும் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதன்போது படையினர் கோரிய 40 மற்றும் 70 ஏக்கரைவிட மேலதிகமாக 70 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 40 எக்கர் படைமுகாம் 70 ஏக்கரிலும் 70 ஏக்கர் படைமுகாம் 110 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படைமுகாம்களின் அளவுகளை படையினரே வழங்கியிருந்தனர். இந்நிலையில், மாவட்டச் செயலகத்தின் அளவீடுகள் இதுவரை பூர்த்தியாகவில்லை. பூர்த்தியானதும் படையினர் குறிப்பிட்ட தொகையைவிட மேலதிக நிலம் அபகரிக்கப்பட்டால் இது தொடர்பாக உரையாடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்கம் அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Related Posts