வலிகாமம் வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடைபவனி

வலிகாமம் வடக்கு பகுதிகளிலுள்ள தங்களுடைய காணிகளை விடுவிக்க கோரி, மக்கள் இன்று நடைபவனியொன்றை மேற்கொண்டுள்ளனர்.

nadai-bavani-1

மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் நல்லூர் ஆலய முன்றலில் கூடி, அங்கிருந்து யாழ். நகரிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை நடைபவனியை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் நல்லூர் ஆலயத்தில் கூடிய மக்கள், தேங்காய் உடைத்து நடைபவனியை ஆரம்பித்தனர்.

குறித்த நடைபவனி நல்லூர் ஆலய வீதியூடாக சென்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை கையளித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்து யாழ். மாவட்டச் செயலகத்திற்கு சென்ற மக்கள், அங்கு வைத்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கையளிப்பதற்கான தமது மனுக்களின் பிரதிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தனர்.

தொடர்ந்தும் எமக்கு முகாம் வாழ்க்கையா, இலங்கை அரசே ஜெனீவாவில் பொய் சொல்ல வேண்டாம், அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்ட உம் உறவுகளின் நிலைப்பாடு என்ன, ஜனநாயகம், நல்லாட்சி, காணி விடுவிப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகள் எங்கே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை நடைபவனியில் கலந்துகொண்டிருந்தோர் தாங்கியிருந்தனர்.

இன்றைய இந்த நடைபவனியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், ஈ. சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

nadai-bavani-4

nadai-bavani-3

nadai-bavani-2

Related Posts