வலிகாமம் வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் ஜெனீவாவில் !

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25வது கூட்டத்தொடரில் வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்துத் தொடர்ந்து இரண்டு நாட்களாக வலி.வடக்கு பிரதேச சபையின் துணைத் தவிசாளரும் வலி வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுத் தலைவருமான சண்முகலிங்கன் சஜீவன் அம்பலப்படுத்தினார்.

sajeevan

தாயகத்தில் நிலப்பறிப்புக்குள்ளாகிய மக்களின் நிலை குறித்து நேற்று முன்தினம் திங்கட்கிழமையும் நேற்று செவ்வாய்க்கிழமையும் இரண்டு கட்டங்களாக அவர் உரையாற்றினார்.

முன்னதாக இனவாதம் குறித்த பொது விவாதத்தில் கலந்துகொண்ட சண்முகலிங்கன் சஜீவன் முக்கிய கருத்துக்களை சர்வதேசத்திற்கு முன்வைத்திருந்தார்.

தமிழர் வழிபாட்டுத்தலங்களை அழித்துவிட்டு தாயகத்தில் வழக்கில் இல்லாத ஒரு மதத்தின் சின்னங்களையும் வழிபாட்டிடங்களையும் அங்கு ஆக்கிரமிப்பு இராணுவத்தினூடாக நிறுவி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆக்கிரமிப்பு இடங்களில் இன அழிப்பைக் குறிவைக்கும் குடியேற்றங்களை மேற்கொள்ளுதல் என்பது இன அழிப்புக்கான சித்தாந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் பகுப்பாய்வு செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திங்கட்கிழமையன்று பாலஸ்தீன விவகாரம் குறித்த விவாத்தின்போது உரையாற்றிய சஜீவன், காசா ஆக்கிரமிப்பு நிலையையே தமிழ் மக்களும் எதிர்கொண்டு வருகின்றனர் எனக் கூறினார்.

வலிகாமம் வடக்கு மக்களின் அவல நிலையையும் அவர் பகிரங்கப்படுத்தினார்.

இதை எதிர்பாராத சிறீலங்கா அரச தரப்பினர் அவர் உரையாற்றி முடியும் தறுவாயிலேயே தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த – வலி.வடக்கு மக்களின் சொந்த நிலங்களை ஆக்கிரமித்து அதனை இராணுவக் குடியிருப்பாக மாற்ற முயல்வாதாக சஜீவன் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இந்த மக்களின் குடியிருப்புக்கள், பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் என அனைத்து கட்டிடங்களும் இலங்கை அரச படைகளினால் தரைமட்டமாக்க்கப்படிருப்பதையும் அவர் மனித உரிமைச் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

Related Posts