வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக் காரணமாக அக்காணிகள் விடுவிக்கப்படாது எனவும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான அளவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 171 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடிதங்களைக் கொண்டுசென்ற கிராமசேவகர்களுக்கு முகாமிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், கடிதங்களையும் வாங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அக்கடிதத்தில், நலன்புரி முகாமில் வசிக்கும் காணி இல்லாதோருக்கு காணி வழங்கப்படுமெனவும், இரண்டாவது கட்டமாக விடுவிக்கப்படவுள்ள 460 ஏக்கர் காணியினுள் உள்ளடங்கும், நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்கள் தமது இடத்தில் விரைவில் குடியேற்றப்படுவர்.
மீதமுள்ள காணிகள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய அவைகள் மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படமாட்டா. அவற்றுக்குப் பெறுமதியான இழப்பீடு உங்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு, 171 குடும்பங்களுக்கு இக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதில், தையிட்டி வடக்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை ஆகிய கிராமங்கள் முழுமையாகவும், பலாலி கிழக்கு, பலாலி வடக்கு, பலாலி தெற்கு, வயாவிளான் மேற்கு, குரும்பசிட்டி, கட்டுவன் ஆகிய கிராமங்கள் பகுதியாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய விடமுடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக்கடிதத்தில் கையொப்பமிடவேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு நிலுவையிலுள்ளது மேற்படி நடவடிக்கை முன்னெடுப்பது முற்றிலும் தவறானது. தாம் இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று பேசுவதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.