வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட, ஏனைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகளை அமைத்திருந்தனர்.
தற்போது அவ்வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்படுவதால் இது நிரந்தர வேலிகளா என்றும் மீதமுள்ள தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பகுதியில் 9 கிராமஅலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதிகளாக மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன்போது அனுமதிக்கப்படாத பகுதிகள், மரக்கட்டை வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தன.
தற்போது மக்கள், விடுவிக்கபட்ட தமது நிலங்களை துப்பரவு செய்ய சென்ற போது, மரக்கட்டை வேலிகள் அனைத்தும் கொங்கிறீட் வேலிகளாக மாற்றப்பட்டடுவருகின்றன.
மரக்கட்டை வேலிகளை பார்த்து மீதமுள்ள எமது நிலங்களும் விடுவிக்கப்படும் என்று நம்பினோம். கொங்கிறீட் தூண் வேலிகள் அமைப்பட்டு வருவதால் மிகுதி காணிகள் இனிமேல் விடுவிக்கப்படாத நிலை ஏற்படுமோ என்று அச்சமடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.