வற் வரி அதிகரிப்பில் திருத்தம்!

பொதுமக்களுக்கு சுமை அதிகரிக்காத வகையில் வற் வரியை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு அனுமதி வழங்கிய பின்னர், வற் வரி (பெறுமதிசேர் வரி) விவகாரம் பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போதே சேவைத்துறைக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அதாவது மருத்துவம், கல்வி உள்ளிட்ட விடயங்களுக்குத் தாக்கம் ஏற்படாத வகையில் வரி அமுல்படுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப திருத்தங்களை மேற்கொண்டுவிட்டு, உரியவகையில் எல்லைகளை வகுத்துக்கொண்டு வற் வரி அதிகரிப்பை மேற்கொள்ளலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மே 2 ஆம் திகதிமுதல் அமுலுக்குவரும் வகையில் வற் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என நீதி அமைச்சு அறிவித்ததையடுத்து அதற்கு சகல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

மக்களுக்கு சுமை அதிகரிக்கும் விதத்தில் வரி அதிகரிப்புக்கு தான் இடமளிக்கமாட்டார் என ஜனாதிபதி நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டுள்ளது.

Related Posts