வற்வரி அதிகரிக்கப்பட்டதன்மூலம் சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும். இதனால் சாதாரண பொது மக்களே பாதிக்கப்போகின்றனர் என தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
வற் வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது குறித்து தொடர்ந்து கூறுகையில்,
அரசாங்கம் அண்மையில் வரி அறவீட்டில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. அதனடிப்படையில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வருமான வரியில் மாற்றம் செய்துள்ளது. அத்துடன் மூலதன வரி என்று புதிய வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசாங்கம் கடந்த வரவு செலவு திட்டத்தில் வரியில் சில வரைறைகளை மேற்கொண்டிருந்தது. என்றாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் மூலம் அந்த வரையறைகளைவிட சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
வற்வரி ஆரம்பத்தில் 8வீதம் முதல் 11.5 வீதம் வரையே இருந்து. தற்போது இதை 15வீதம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கு வரி அதிகரிக்கப்படுவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் என்ன என்பதை பட்டியலிட்டு அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படாதது சிறந்த விடயம் என்றாலும் வரி அதிகரிப்பானது மக்களுக்கு பாரிய சுமையாகும்.
வற்வரி எனும் பெறுமானம் சேர் வரி சகல பொருட்களுக்கும் சேவைகளுக்கும் அடங்குகின்றது. அரசாங்கம் அறிவிக்கும் பொருட்களை தவிர ஏனைய சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் அதேபோன்று சகல சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படும்.
இது அரச, தனியார் துறை என்றில்லாமல் சகல மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வானது மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாததொன்றாகும். எனவே அரசாங்கம் வற்வரியில் அதிகரிப்பை மேற்கொள்ளக்கூடாது.
அதேபோன்று அரசாங்கம் வருமான வரியில் சிறியதோர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அரச, தனியார் சேவையாளர்கள் வருடத்துக்கு 7 1/2 இலட்சத்துக்மேல் வருமானம் பெற்றால் அதில் 4வீதம் முதல் 16வீதம் வரை வருமான வரி அறவிடப்பட்டது. கடந்த வரவு செலவு திட்டத்தில் மொத்த வருமான வரியை 15வீதமாக்கியது. அதாவது வருடத்துக்கு 2இலட்சம் வருமானமாக பெறுவோரிடம் இந்த வரி அறவிடப்பட்டது. தற்போது இந்த வருமான வரி 17வீதமாகியுள்ளது.
அரசாங்கம் கடன் சுமையில் இருந்து மீள்வதற்கு இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக கூறுகிறது. ஆனால் வருமான வரி மூலம் பெறப்படும் வருமானம் அரச வருமானத்துக்கு குறிப்பிடும் அளவு தொகையை வழங்குவதில்லை. மாறாக வற் வரி மூலமே கூடுதலான வருமானம் கிடைக்கின்றது.
அதேபோன்று மூலதனவரி என்று ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எம்மிடம் இருக்கும் சாதாரண காணியொன்றின் பெறுமதி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் காரணமாக அதிகரிக்கின்றது. இந்த அதிகரிப்புக்கு வரி அறவிடப்படும். இவ்வாறான வரி உலகில் வேறு நாடுகளிலும் அறவிடப்படுகிறது. இந்த வரியை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் வற்வரி தொடர்பாக அரசாங்கம் மீண்டும் திருத்தம் மேற்கொண்டு சாதாரண மக்கள்மீது பொருளாதார சுமையை ஏற்படுத்தாதவாறு நடவடிக்ககை எடுக்கவேண்டும் என்றார்.