வற்றாப்பளைக்கு இளைஞர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்து ; ஒருவர் பலி ; ஐவர் படுகாயம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உழவியந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாக சென்ற உழவு இயந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்ப முற்பட்டபோது பெட்டி கழன்று தடம் புரண்டுள்ளது.

குறித்த விபத்தில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த 16 அகவையுடைய ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞனின் உடலம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

Related Posts