வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள் மீண்டு கல்வியைத் தொடர வணிகர் கழகம் உதவி

யாழ் மாவட்டத்தில் வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் இடைவிலகிய மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடரும் வகையில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.பிரதேச செயலகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்களையும் வழங்கி வைத்தார்.

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் எணணிக்கையும் விலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக அதிகரித்து வந்திருந்தது.

இந்த நிலையில் மாணவர்களை இத்தகைய ஆபத்திலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் மாணவர்களுக்கு உதவி வழங்குவதற்கு யாழ் வர்த்தக சங்கம் முன்வந்திருந்தது.

இதற்கமைய யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை விட்டு இடை விலகிய மற்றும் இடை விலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களிற்கு உதவிகளை வழங்கி மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததது.

இங்குள்ள சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக மாவட்டச் செயலகத்துடன் இணைந்து இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் முதற் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அங்கு 500 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களை பாடசாலையில் மீளவும் இணைத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்திலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இந்தநிலையில் இதன் ஐந்தாம் கட்ட நடவடிக்கையாக யாழ் மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் பாடசாலையை விட்டு இடைவிலகிய மற்றும் இடை விலகும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்ற சுமார் 500 மாணவர்களை இனங்கண்டு அவர்களிற்கு உதவிகளை வழங்கியுள்ளது.

இதனூடாக அந்த மாணவர்கள் தமது கல்வியை மீளவும் தொடர்வதற்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று தொடர்ந்தும் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடர வேண்டுமென்றும் இதன் போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனன், யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் மற்றும் செயலாளர் உள்ளிட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயலர்கள், அரச அதிகாரிகள், யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts