வறுமைக்கு கரம் கொடுக்கும் ‘உணவளிக்கும் கரங்கள்’

நாம் ஓர் அற்புதமான உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். எம்மைச் சூழ இரு வகையானவர்கள் வலம்வருகின்றனர். ஒரு சாரார் செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். இன்னோர் சாரார், ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இறைவன் படைப்பில் எவ்வித நீதமும் இல்லையென்று தோன்றுகின்றதல்லவா?

சவூதி மன்னர் சல்மான் 460 தொன்கள் கணமான 23000 சுகபோக பெட்டி, படுக்கைகளுடனும், 1500 பணியாட்கள், 50 மேற்பட்ட வாகனங்களுடன் வெளிநாட்டு சுற்றுலாவொன்றில் ஈடுபடுகின்றார். புருனை சுல்தான் ஹஸன் அல் போல்கியா 7000க்கு மேற்பட்ட விலை மதிக்க முடியாத ஆடம்பர கார்களை பொழுதுபோக்கிற்காக சேகரித்து வருகின்றார்.

மறுபுறம், உலகின் சனத்தொகை 7 பில்லியன்களை தாண்டியுள்ளது. உலகின் 1.2 பில்லியன் மக்கள் குறைந்த வருமானமுடையவர்களாகவும், வறுமையால் துன்புறுகின்றவர்களாகவும் வாழ்கின்றனர். வறுமை, பசியால் உயிரிழக்கின்றவர்களின் வீதமும் அதிகரித்துச் செல்கின்றது.
இலங்கையும் வறுமை, பசி, பட்டினி போன்றவற்றிலிருந்து விடுபட்ட நாடொன்றல்ல.

கொழும்பின் வானுயர் கட்டடங்களுக்கு பின்னாலும் வறுமையின் அகோரம் தலைவிரித்தாடுவதை மறுப்பதற்கில்லை. வானுயர் கட்டடங்களும், அபிவிருத்தியும் இம்மக்களின் பிரச்சினைகளை மறைக்கின்றன. ஆடம்பரமும், வீண்விரயமும் பாரிய வளத்தையும் மூலதனத்தையும் அழிக்கின்றன. ஒரு கூட்டத்தார் வறுமையால் வாடினாலும் உணவு வீண்விரயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறிருக்க, உணவு வீண்விரயமாகும் பகுதியொன்று இனங்காணப்பட்டு, அவற்றை தேவையுடையோருக்கு கொண்டுசெல்லும் திட்டமொன்று குறித்தே நாம் இந்த கதையினூடாக ஆராயவுள்ளோம்.

உணவு வீண்விரயத்தை தடுக்க பல்வேறு நாடுகளில் போற்றத்தக்க ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. சீனாவின் உணவு விடுதியொன்றில் குறிப்பிட்டதொரு தொகையை செலுத்திவிட்டு போதியளவு சாப்பிடலாம். இறுதியாக சாப்பிட்டு முடிந்து உணவுத் தட்டிலிருந்து கையை எடுக்கும்போது தட்டில் உணவு எஞ்சியிருக்கக்கூடாது. தட்டில் உணவு இருப்பின் அதற்கு மேலதிக கட்டணமொன்றை அறவிடுவதினூடாக உணவு விரயத்தை தடுக்கின்றனர்.

தாய்லாந்திலும் அழகிய வழிமுறையொன்றினூடாக உணவு வீண்விரயத்தை தடுக்கின்றனர். தாய்லாந்து திருமணங்களில் பரிமாரப்படுகின்ற உணவுகளில் எஞ்சியவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் பல பில்லியன்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தாலும் தாம் சாப்பிட்டு, எஞ்சியதை பொதிகளில் கொண்டுசென்று விரயமில்லாத முறையில் பயன்படுத்துகின்றனர். உணவு என்பது விரயமாகக்கூடாத வளம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இலங்கையின் தலைநகரில் நடைபெறுகின்ற திருமண வைபவங்களில் பெருமளவான உணவு விரயமொன்று இடம்பெறுவதை தொண்டர் அமைப்பொன்று உணர்ந்து, அதனை தேவையுடையோருக்கு கொண்டுசெல்வதற்கான திட்டமொன்றை அமைத்து, செவ்வனே முன்னெடுத்துச் செல்வதை அறியக்கிடைத்தது.

IMG-20170403-WA0038கொழும்பில் நடைபெறும் திருமண வைபவங்களில் நிகழும் உணவு வீண்விரயத்தைத் தடுப்பதற்காக குறித்த தொண்டர் அமைப்பு மேற்கொண்டுவரும் திட்டம் பற்றிய விளக்கைத்தை அமைப்பின் செயலாளர் அஸ்கர் கான் இவ்வாறு விபரிக்கிறார், ‘பல்வேறு நாடுகளிலும் உணவு விரயத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் தொடர்பாக அறியக்கிடைத்தது.

இலங்கையில் அதுபோன்ற நடைவடிக்கைகள் இல்லாத வெற்றிடம் காணப்பட்டது. உணவு விரயமாகும் இடங்களில் முதன்மையானதாக கொழும்பில் நடைபெறும் திருமண வைபவங்களை இனங்காண்டோம். திருமணமொன்றுக்கு 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் 750-800 பேரளவிலேயே கலந்துகொள்கின்றனர். பெருமளவு உணவு பயன்படுத்தப்படாது எஞ்கின்ற நிலைமை. திருமண வீட்டார் மிகுதியை வீட்டுக்கு கொண்டுசெல்வதும் அரிதான விடயமாகும். எஞ்சியவைகள் அடுத்த தினங்களில் மிருகங்களுக்கு தீனியாக பண்ணைகளுக்கு அல்லது குப்பைக்கே. இதற்காக, மாற்றுத்திட்டம் குறித்து கலந்துறையாடினோம். தரம் கெடாத, பழுதடையாத, சுத்தமான உணவுகளை பொதிசெய்து உடன் தேவையுடையோருக்கு கையளிப்பது குறித்த முடிவுக்கு வந்தோம்.

இவ்வாறான திட்டமொன்றுக்கு மூன்று கூட்டத்தாரின் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்றாகும். திருமண வீட்டார், திருமண மண்டபம் மற்றும் உணவைப் பெற்று பொதிசெய்து பகிர்ந்தளிக்கும் தொண்டர்கள். இவர்கள் இணைந்து உணவு பொதி செய்யப்பட்டாலும், யாருக்கு வழங்குவதென்ற கேள்வியும் நான்காவதாக எழுகின்றது.

எமது தொண்டர் குழு மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்கும்போது, கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்த ஒருவரின் குடும்பத்து திருமணமொன்றில் பரீட்சார்த்தமாக திட்டத்தை செய்துபார்க்க அழைப்பு கிடைத்தது. எமது திட்டத்தை 05-02-2017 ஞயிற்றுக்கிழமை பரீட்சார்த்தமாக செய்துபார்த்தோம். திருமண மண்டபத்துக்கு சென்று எஞ்சிய உணவைப் பெற்று, பொதிசெய்தோம். மாளிகாவத்தை, சென்ட்ரல் வீதி, பேஸ்லைன் வீதி, கல்கிஸ்ஸ பகுதிகளைத் தெரிவுசெய்து, பள்ளிவாசல் நிர்வாகத்தின் உதவியுடன் 300க்கு மேற்பட்ட உணவுப் பொதிகளை முதல் நாள் பகிர்ந்தளித்தோம். முதல் நாள் எமக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

முழு நாட்டுக்குமான திட்டமொன்றாக இல்லாவிட்டாலும் கொழும்புக்குள் மாத்திரம் செயற்படுத்த தீர்மானித்தோம். அதற்காக உணவளிக்கும் கரங்கள் என்ற பெயரையும் வைத்தோம். தொண்டர் பணியாளர் குழுக்களும் தலைவர்களும் நியமிக்கப்பட்டார்கள். இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. கொழும்பில் 32 திருமணங்களில் இருந்து எமக்கு அழைப்பு கிடைத்தது. இதுவரையில் 7266 உணவுப் பொதிகளை இன, மத, பேதம் பாராது, தேவையுடையவர்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம். உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொண்டர்களின் திருப்தியை அவர்களின் கண்களில் கண்டோம்.’ என்றார்.

கொழும்பு சென்ட்ரல் வீதியில் உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்த தொண்டர் பணியாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது, ‘சென்ட்ரல் வீதியில் 150 போதிகளைப் பகிர்ந்தோம். அங்கு 1000 மேற்பட்டோர் தேவையுடையோராக இருக்கின்றனர்.’ என்றார்.

உணவளிக்கும் கரங்கள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றபோது வீண்விரயமாகும் நிலையில் இருந்த 7266 உணவுப் பொதிகள் 7266 பேர்கள் ஒருநேரமாவது வயிராருவதற்கு வழிசெய்துள்ளது.

உணவளிக்கும் கரங்கள் அமைப்பின் இன்னோர் உறுப்பினர் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும்போது, ‘தலைநகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 20 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்தேன். அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள்.’ என்றார்.

உணவளிக்கும் கரங்கள் அமைப்பு கொழும்பு திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமண வைபவங்களில் கரம் படாது எஞ்சிய உணவுகளை சேகரித்து, பொதிசெய்து, கொழும்பில் உணவுத் தேவையுடைய முச்சக்கரவண்டி சாரதிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், சேரிப்புறங்களில் வசிப்பவர்கள், கட்டட, பாதை வேலைகளில் ஈடுபடுவோர் போன்றவர்களுக்கு பகிர்ந்தளித்து வருகின்றது. உணவைப் பொதியிடுவதற்குத் தேவையான பெட்டி, பொலிதீன் உறைகள், போக்குவரத்து வசதி போன்றவற்றையும் தன்னார்வ தொண்டர்கள் வழங்கிவருகின்றனர்.

உணவளிக்கும் கரங்கள் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்து அமைப்பின் செயலாளர் தெரிவித்ததாவது, ‘சாப்பாடு என்பது பெரியதோர் உழைப்பின் பின்னர் வரும் விளைவு. வீணாகும் சாப்பாடு தேவையுடையோருக்கு போய்ச் சேர வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த விடயம் மக்கள் மத்தியில் வரும்போது, நாம் தான் இதைச் செய்யவேண்டும் என்றில்லை. பொருத்தமானவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். இதனுடைய பெயரையும் உணவளிக்கும் கரங்கள் என்றே வைத்துள்ளோம். யாரும் இந்த விடயத்தில் இணைந்து பயணிக்கலாம்.

திருமணங்களுக்கு உறவினர்களையும் வசதிபடைத்தவர்களையுமே அழைப்பார்கள். உண்மையான தேவையுடையவர்கள் அழைக்கப்படுவதில்லை. வசதியற்றவர்களுக்கு உணவழிப்பதே சிறந்த விருந்துபசாரமாகும். கொழும்பு திருமணங்களில் ஒருவருக்கு 2000-3000 வரை செலவழிக்கப்படுகின்றது. வசதியற்ற 100 பேரை மண்டபத்துக்கு அழைத்து விருந்தளிப்பது சாத்தியமாகாது. திருமணத்தில் ஒருவருக்கு 2000-3000 செலவில் உங்களுக்கு தேவையானவர்களை அழைக்கவும். ஆனால் 100 பேருக்கு ரூபா 200 பெருமதியான சாப்பாட்டு வசதிகளை செய்து தரும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளோம்.’ என்றார்.

முஸ்லிம்களால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இது முஸ்லிம்களுக்கு மாத்திரமான திட்டமல்ல, அனைவருக்கும் உணவளிக்கும் கரங்களே என்பதை அவர் உறுதியாக கூறினார். உணவு வீண்விரயத்தை தவிர்க்க கொழும்பில் கடந்த இரு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்மாதிரி செயற்திட்டமொன்றே இது. இதனை ஏனைய தமிழ், சிங்கள திருமணங்களிலும் செயற்படுத்தலாம். வறுமையின் பிடியில் வாடுபவர்களின் ஒரு நேர உணவுத் தேவையையாவது இவ்வாறான திட்டங்கள் மூலம் நிவர்த்திசெய்யப்படுகின்றன.

இறைவன் நீதியாளன். சிலருக்கு செல்வத்தை கொடுத்தும் சோதிப்பான். சிலரை வறுமையால் சோதிப்பான். செல்வந்தர்கள் தர்மத்தின் மூலம் வறுமையில் வாடுபவர்களுக்கு உதவவேண்டும் என்பதும் இறைநியதியே.

Related Posts