வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல! இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவு!!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சிக்குப் பலரும் இயற்கையையே குற்றம் சாட்டிவருகிறார்கள். இயற்கை வஞ்சித்துவிட்டது என்றும் இயற்கையின் கொடூரம் என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள். உண்மையில் வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் வறட்சி என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும் உழவர் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டிருந்த இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று திருவள்ளுவர் தனது திருக்குறளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனைச் சரியா எனப் பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இயற்கையைத் தொழுத விவசாயிகள் பெய்யெனச் சொன்னால் பெய்யும் மழை என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். எமது முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள். அப்போதெல்லாம் மாரி பொய்க்கவில்லை, இயற்கை எங்களை வஞ்சிக்கவில்லை.

நாங்கள் இப்போது பசுமைப்புரட்சியின் பெயரால் விவசாய நிலங்களை வன்புணர்ச்சி செய்து வருகிறோம். நச்சு விவசாய இரசாயனங்களால் பூமியின் மேனியெங்கும் நனைத்து வருகிறோம். ஆழ்குழாய்க் கிணறுகளைத் தோண்டி நிலத்தடி நீரையெல்லாம் வீணாக வாரியிறைத்து வருகிறோம். இயற்கைக்கு நாங்கள் இழைத்துவரும் இத்தகைய கொடூரங்களின் விளைவாகவே கடும் வரட்சியும் பெரும் வெள்ளமும் ஏற்படுகிறது.

இயற்கையின் இந்தச் சீற்றங்களை இயற்கையின் கொடூரங்களாகப் புரிந்து கொள்ளாமல் இயற்கை எங்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கைகளாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்யாமல் எமது விவசாயச் செயன்முறைகளை மீளவும் இயற்கையோடு இயைந்ததாக நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். தவறின், இயற்கை எங்களை ஏதோ ஒரு வழியில் தண்டிப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உழவர் பெருவிழாவில் வறட்சியை எதிர்கொள்ளவல்ல விவசாய முறைமைகள் தொடர்பாகக் கண்காட்சி ஒன்றை வடமாகாண விவசாயத் திணைக்களமும், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு…

Related Posts