வறட்சியான காலநிலை நிலவினாலும், மின்சார துண்டிப்பு இடம்பெற மாட்டாதென மின்சக்த்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களில் இவ்வாண்டிலேயே மிகக் குறைவாக பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாளாந்தம் 50 மொகா வாட்ஸ் மின்சாரத்தை சேமிப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சா கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்கனை குறிப்பிட்டார்.
மின்சாரத்தை சேமிப்பது பற்றி மக்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்யவும்,அரசாங்கம் தயார் என நிகழ்வில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய மேலும் தெரிவிக்கையில் :
வறட்சியின் காரணமாக நாடு எதிர்கொண்டிருக்கும் மின்சார பிரச்சினை குறித்தும், அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தி அடுத்தவாரம் அமைச்சரவைக்கு ஆவணமொன்று சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக எரிபொருட்களை வழங்குமாறு அமைச்சரவைப் பத்திரத்தில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து நியாயமான விலையில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டின் பின்னர் 2016ஆம் ஆண்டே மிகவும் குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நீர்த்தேக்கங்களில் 95 வீத நீர்மட்டம் காணப்பட்டது. எனினும், இந்த வருடம் 40 வீத நீர்மட்டமே காணப்படுகிறது.
எஞ்சியுள்ள நீரில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பின்னரே நீர்மின் உற்பத்திக்கு நீர் வழங்கப்படும். எனவே நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மாற்று வலுக்களைப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். தற்பொழுதுள்ள சூழ்நிலையில் காற்றின் வேகம் குறைந்திருப்பதால் காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் சவால்கள் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.