வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்து

வருமானவரி செலுத்துவோர் வரிமதிப்பாண்டான 2011/2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிக் கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 106 (1) ஆம் பிரிவின் கீழ் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வரிமதிப்பாண்டு 2011/2012 வருமான வரித்திரட்டுக்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் வருமான வரிக்கோவைகளை வைத்திருப்போர் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படி வரிமதிப்பாண்டுக்கான வரிக் கொடுப்பனவுகள் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என்று வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இதுவரை வரியைச் செலுத்தாதவர்கள் அதனை உரிய முறையில் இலங்கை வங்கியில் செலுத்தி வரி விவரத்திரட்டுடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படி வியாபார அல்லது வர்த்தக இலாபங்கள் மற்றும் வருமானங்களை வெளிப்படுத்துவோர் வரிவிவரத்திரட்டுடன் தமது நிதியாண்டுக்கான இறுதிக்கணக்குக் கூற்றையும் இணைக்க வேண்டும்.

இது தொடர்பில் பிரச்சினைகள் ஏதும் இருக்குமாயின் பிரதி ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம். மேற்படி வரிமதிப்பாண்டுக்கான வருமான வரிக்கு பொறுப்புடையவர்களாக இருந்தும் இதுவரை வரிக்கோவைகளை வைத்திருக்காதவர்களும் தாமாக முன்வந்து வரிக்கோவைகளைத் திறக்கலாம்.

இவ்வாறு திறந்து உரிய வரிகளைச் செலுத்த வரி விவரத்திரட்டுக்களை குறித்த திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதற்குரிய விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புதிய வரி செலுத்துவோரின் கடந்த கால வருமான விவரங்கள் பற்றி எதுவும் கோரப்படமாட்டாது.

வரியைச் செலுத்தாமலோ அன்றி வரி விவரத்திரட்டை சமர்ப்பிக்காமலோ தட்டிக் கழிக்கப்படும் இடத்து தண்டப்பணம் அறவிடுவதற்கான ஏற்பாடுகளுக்கும் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் இடமுண்டு.

யாழ்.பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தின் கீழ் மாடித் தளத்தில் 30.11.2012 இல் வருமானவரி விவரத்திரட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட கருமபீடமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தக் கருமபீடம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை திறந்திருக்கும்.

எனவே உரிய வேளையில் வரிக் கொடுப்பனவுடன் வரி விவரத்திரட்டையும் சமர்ப்பித்து தண்டப்பணம் செலுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு வரி செலுத்துவோரைப் பிரதி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts