இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு தம்மைச் சந்தித்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி உறுதிமொழியை மன்னார் ஆயரிடம் வழங்கினார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற மன்னார் ஆயர் அங்கு 120 தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து உரையாடினார்.
பின்னர் வெலிக்கடைச் சிறைக்குச் சென்று அங்குள்ள 5 பெண் அரசியல் கைதிகளையும் சந்தித்து உரையாடினார்.
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குள் கைதிகள் விடுதலை செய்யப்படுவது சாத்தியமாகாது. எனினும் இந்த வருட முடிவுக்குள் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால மேற்கொள்வார் என்று மன்னார் ஆயரிடம் தெரிவித்தார் என மேலும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.