வருங்கால சந்ததியினரை இனப்பற்றுடன் வளரச் செய்ய வேண்டும் – கஜதீபன்

p-kajatheepan“எமது வருங்கால சந்ததியினரை இனப்பற்றுடன் வளரச் செய்ய வேண்டும். எமது இனம் இன்று பல வழிகளிலும் பல இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், வருங்கால சந்ததியினரை எமது இனத்தின் தொன்மை வரலாறு, செழுமையான கலாசாரம், சமய நம்பிக்கை ஆகியனவற்ருடன் வளர்த்து வந்தால், பிறருக்குத் தீங்கு விளைவிக்க அஞ்சுகின்ற ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்” என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காடு ஞானகலா முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (8) முன்பள்ளியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கஜதீபன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இன்று எமது இனத்துக்கெதிராக சத்தம் இல்லாத யுத்தமொன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் இந்த சிறார்களை சமூகம் அங்கீகரிக்கவல்ல, சமுதாயத்துக்குப் பயன்மிக்கவர்களான, நற்பிரஜைகளாக வளர்த்திடுவதற்கு பெற்றோர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.

வரலாற்றில் மிகப்பெரிய யுத்தம் நடைபெற்ற நாடுகளில் யுத்தத்தின் போதும் அதற்குப்பிறகும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான்.

அந்த வரலாற்றுத்தொடர்ச்சியில் தான் நாம் இன்று இருக்கின்றோம். அந்த வகையில் எமது குழந்தைகள் போசாக்கின்மை, கல்வியில் கவனச்சிதறடிப்பு, குடும்ப வறுமை, குடும்ப உறவினர்கள் இழப்பு போன்ற பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இவ்வாறான நெருக்கடிகளையும் தாண்டி அவர்களை மிகச்சிறந்த மனிதர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய மிகப்பாரிய பொறுப்பு இங்குள்ள ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உடையது.

எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் வரலாற்றில் தடம் பதிக்கும் வண்ணம், அவர்களை இனப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும் வளர்க்கவேண்டும். இதன்மூலமே எமது இனம் வருங்காலத்தில் தடைகளைத்தகர்த்து தலைநிமிர்ந்து வாழமுடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts