2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்படி வடமாகாணத்திற்கான பாரிய அபிவிருத்தி என்பது வெறும் கண்துடைப்பு மாத்திரமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதிகள் வழங்குவாரே தவிர அவற்றை நிறைவேற்ற மாட்டார். பிரதமரையும் அரசாங்கத்தையும் நம்பி, தமிழர்கள் ஏமாற்றத்தையே எதிர்நோக்குகின்றனர்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் வடமாகாணத்திற்கான அறிவிப்புகள் வெறும் கண்துடைப்பாகவே அமைந்துள்ளது. காரணம் கடந்த வருட வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போது நிதியமைச்சர் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தினை முழுமைப்படுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மக்களுக்ககாக ஒரு இலட்சம் வீடுகள் கையளிக்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் இன்று வரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை.
இதேவேளை யுத்தத்தில் பங்காற்றிய இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அரசாங்கம் தமிழர்களுக்காக போராடிய போராளிகளின் எதிர்காலத்தைப்பற்றி வரவு செலவுத்திட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கிய அரசாங்கம், வடக்கில் வேலையின்மையை எதிர்நோக்கியுள்ள இளைஞர் யுவதிகள், பட்டதாரிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கியிருப்பார்களாயின் அரசாங்கத்தின் எழுச்சியை அது வெளிப்படுத்தியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.