வரவு – செலவுத் திட்டத்தை முறியடித்தல் மன்னிக்க முடியாத குற்றம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சார்பில் கொண்டு வரும் வரவு – செலவுத் திட்டத்தை முறியடித்தல் என்பது மன்னிக்க முடியாத குற்றம் அத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதுபற்றி பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறு செய்யாமல் தமது வரவு – செலவுத் திட்டத்தை தாமே முறியடித்தவர்கள் வெட்கப்பட வேண்டுமெனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவைத் தருவதாக அமையவில்லை. முதல் முதலாக தொடங்கப்பட்ட வடமாகாண சபை என்பதால் பல பூர்வாங்க விடயங்களில் என் கவனம் உள்நுழைந்திருந்தமையால் என்னால் உள்ளூராட்சி மன்றங்களின் மீது முழுமையான கவனத்தை செலுத்த முடியவில்லை.

ஒரு பக்கம் உங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கும். அதே சமயத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் சுயநலம் கட்டுக்கடங்காமல் செல்வதை நான் அவதானித்துள்ளேன்.

எமது கட்சியின் அங்கத்தினர் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு தமது கட்சியின் வரவு – செலவுத் திட்டங்களை முறியடிக்க முன்வருகின்றார்கள் என்றால் எமது உறுப்பினர்களுள் ஏதோ ஒரு குறைப்பாடு இருக்கின்றது என பொருள்படுகின்றது.

பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாமல் போனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம் அல்லது ஒத்துப்போகாதவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யலாம். அதைவிட்டு விட்டு எமது கட்சி சார்பில் கொண்டு வரும் வரவு – செலவுத் திட்டத்தினை முறியடித்தல் என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகும்.

எமது உள்ளூராட்சி மன்றங்கள் தான்தோன்றித்தனமாகவும் போதிய புரிந்துணர்வில்லாமலும் இதுவரை காலமும் வளர்ந்துள்ளன. போரின் தாக்கமும் அவற்றின் வளர்ச்சியில் படியாமல் இல்லை. கூட்டுறவு அடிப்படையில் இல்லாது இராணுவ ஆணையிடும் அடிப்படையில் உறவுகள் இருந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அலுவலர்களின் ஆட்சி பற்றிய அடிப்படை அறிவும் எந்தளவிற்கு இருக்கின்றன என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

வடமாகாண சபை உள்ளூராட்சி மன்றங்களின் திறனை மீள் விருத்தி செய்யப்பட வேண்டிய காலம் வந்துள்ளது. அத்துடன், தவிசாளர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோரின் கடமைகள் என பலதையும் நாங்கள் அறிய முற்பட வேண்டும். இது தொடர்பில் நிபுணர்களைக்கொண்டு அறிவுரைக் கருத்தரங்குகளை வழங்கவுள்ளோம்.

அத்துடன் எமக்கு தொழில் ரீதியாக முழுமையான அறிவு கிடைத்தால் மன்ற அங்கத்தவர்களை அதுவும் ஒரே கட்சியில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்களை பதவி இறக்குவது போன்ற நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமாட்டோம் என நம்புகின்றேன்.

பதவியில் இருப்பவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். மேலும் கட்சியின் கட்டுக்கோப்பு ஒழுக்கம், கடமைப்பாடு போன்றவற்றையும் கணக்கில் எடுத்து தொழிற்திறனை உறுதி செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களை நாங்கள் தொழிற்திறனுடன் நடத்தினால் தான் எமக்கு போதிய நிர்வாகச் செயலாட்சி. மேலாண்மைத்திறன்களும் தகுதிகளும் உள்ளதென உலகம் நம்பும் இல்லையேல் உள்ளூராட்சி மன்றங்களை நடத்தத் தெரியாதவர்கள் ஏன் தான் சுயாட்சி, தனிநாடு என்று கோசம்போட்டுத் திரிகிறார்களோ தெரியவில்லை என்று எங்களை உலகம் பழிக்கும்.

அத்தோடு எமது கட்சியின் உட்பூசல்கள் வெளியில் வருவதை நாங்கள் தவிர்க்க வேண்டும். விரைவில் வடமாகாண சபையானது உள்ளூராட்சி மன்றங்களின் உட்பூசல்கள், நிர்வாகத்திறனின் குறை நிறைகள், இலஞ்ச ஊழல்கள் போன்ற பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

இதுவரை காலமும் பல வித இடர்களை எதிர்நோக்கிய உள்ளூராட்சி மன்றங்கள் இனி வரும் காலங்களில் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து மக்கள் சேவையை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

முதலமைச்சர் – வடக்கு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் சந்திப்பு

Related Posts