தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பிரதேச சபைகளின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் நடவடிக்கையில் உறுப்பினர்கள் ஈடுபடுவதும் மாற்றுக்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதும் ஒரு குற்றமாகக் கருதப்படுவதுடன் தங்களின் இத்தகைய செயல்கள் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.
எனவே, 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் நோக்குடன் செயற்படுபவர்கள் உறுப்புரிமைகளை இழக்கச் செய்யும் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதைத் தெரியப்படுத்துகிறேன்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை.சேனாதிராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி,வரவு செலவுத் திட்டம் 2014 என்ற தலைப்பில் செயலாளரினால் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தாங்கள் 23.07.2011 நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பெயரிலும் வீட்டுச் சின்னத்திலும் ஒரு வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளீர்கள். வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையகத்தினால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ளீர்கள் என்பதும் உறுப்பினர் என்பதும் பிரகடனமாக வெளியிட்டுள்ளமையை அறிவீர்கள்.
இதனடிப்படையில் 14.12.2013 / 15.12.2013 அன்று தாங்கள் உறுப்புரிமையை வகிக்கும் பிரதேச சபையின் அல்லது நகர சபையின் ஆளும்கட்சி என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுங்கட்சியினால் அதன் தலைவரினால் தாக்கல் செய்யப்படும் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டமையை மீண்டும் வற்புறுத்தியுரைக்கின்றேன். தாங்கள் அங்கம் வகிக்கும் சபையின் வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுதல் அல்லது தோற்கடிக்கும் நோக்கில் வாக்களித்தல் அல்லது வாக்களிப்பில் பங்கு கொள்ளாமல் தவிர்த்தல் மற்றும் இத்தகைய நடவடிக்கைகளில் எதிரணியுடன் அல்லது மாற்றுக்கட்சி உறுப்பினர்களுடன் செயலாற்றுவது ஒரு குற்றமாகக் கருதப்படும். தங்களின் இத்தகைய செயல்கள் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் ஒரு நடவடிக்கையாகும்.
எனவே தாங்கள் சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் நோக்கில் செயற்படுவீர்களாயின் தங்களின் உறுப்புரிமையை இழக்கச் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதைத் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.
இதற்கு மேலாக நாம் தமிழ் நிலத்தினதும் தமிழ் தேசிய இனத்தினதும் விடுதலைக்காக உழைக்கும் ஓர் இயக்கம் என்பதையும் பதவிகளுக்காகப் போட்டியிடுவதற்குப் பதிலாக அர்ப்பணமுள்ளவர்கள் நாம் என்பதை தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடியதாய் எம்மை நிரூபிக்க வேண்டும்.
என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.