வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த வரவு – செலவுத்திட்டம், முறைப்படி ஆளுநரின் அனுமதி பெறப்பட்டு அதன் பின்னரான வர்த்தமானி அறிவித்தல் டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, மாகாணசபைச் சட்டத்திற்கு அமைவாக 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான செலவீனத்தை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை, பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தரான பிரதம செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் எழுத்தாணை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி கையொப்பமிடப்பட்டது.
முதலமைச்சரினால் கையொப்பமிடப்பட்ட எழுத்தாணை வடமாகாண சபை தவிசாளரினால் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வடமாகாண சபை சிரேஷ்ட உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 2014ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.