பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டிற்கான முன்மொழிவுத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை மஹிந்த சிந்தனைக்கமைவாக பலப்படுத்துவதிலும், முன்னேற்றுவதிலும் அமைச்சின் பங்களிப்புகளையும் விளக்கினார். அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு பேருதவியாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்பு நிலையம், பனை அபிவிருத்தி சபை, வடகடல் நிறுவனம் ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக துறைசார்ந்தோர் விளக்கமளித்தனர்.
வரவு – செலவுத்திட்டம் தொடர்பாகவும் அமைச்சினால் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்றிடங்களை வலுப்படுத்துவது தொடர்பான தெளிவுரையினை நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர நிகழ்த்தினார்.
இந்தகலந்துரையாடலில், அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி மங்கலிக்கா மற்றும் அமைச்சின் கீழான நிறுவனங்களது தலைவர்கள், முகாமையாளர்கள் ஆகியோருடன் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.