அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? டக்ளஸ் கேள்வி!

அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை கோட்டை மன்னன் வித்தியா பண்டாரனும், யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியனும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடினர். அதே போன்று, வன்னி சிற்றரசின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனும், கண்டி மன்னனும் இறுதிவரை ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கெதிராகப் போரடினர். இறுதியில், 1811ல் பண்டாரவன்னியனை வெற்றி கொண்டதன் பின்னரே 1815ல் ஆங்கிலேயரால் கண்டியை வெற்றிகொள்ள முடிந்தது. இவை பற்றிய போதிய விளக்கங்கள் இன்றியும், உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்ட நிலையிலுமே எமது மாணவர்களுக்கான வரலாற்றுப் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இவற்றை நிவர்த்தி செய்து தமிழர்களின் உண்மை வரலாறுகளைப் பாட நூல்களில் இடம்பெறச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், நிகழ்ந்த நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறல் வரலாறாகும். அதில், நல்லவை, கெட்டவை, சாதகமானவை, பாதகமானவை என சகலதும் இருக்கலாம். எனினும், பக்கம் சாராது உள்ளதை உள்ளபடி கூறுவதே உண்மை வரலாறாகும். எமது நாட்டில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை இளமை முதல் கற்றுணர்ந்து கொள்வதற்காகவே வரலாற்றுப் பாடம் பாடசாலைகளில் கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிங்கள – தமிழ் மக்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு. சிங்கள மன்னர்களும், தமிழ் மன்னர்களும் எமது பண்டைய இராசதானிகளை ஆட்சி செய்துள்ள நிலையில், சிங்கள மன்னர்களது படைகளில் தமிழ் படை வீரர்களும், தமிழ் மன்னர்களது படைகளில் சிங்களப் படை வீரர்களும் இருந்துள்ளனர். பொலனறுவை அரசு வீழ்ச்சி கண்டதன் பின்னர், சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனிய, யாப்பஹூவ, குருநாகல், கம்பளை, கோட்டை என இடமாறிய வரலாறு பாடநூல்களில் விரிவாகக் காணப்படுகின்ற நிலையில், அதே காலகட்டத்தில் வட இலங்கையில் கலிங்கமான், சாவகன், வன்னியர், ஆரிய சக்கரவர்த்திகள் போன்றவர்களது இராசதானிகள் தோன்றிய வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசால் வெளியிடப்பட்ட வரலாற்றுப் பாடநூல்களில் அரிதாக, தமிழர் மற்றும் தமிழ் மன்னர்களது ஆட்சி பற்றிக் கூறப்பட்டிருந்தபோதிலும், அந்த விடயங்களும் அண்மைக்கால வரலாற்று பாடநூல்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அதே நேரம் இதுவரைக் காலமும் எமது வரலாற்றுப் பாடநூல்கள் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் சிங்கள மொழியில் எழுதப்பட்டவை என்றும், அந்நூல்களே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டவை என்றும், இதில், தமிழ் வரலாற்று ஆசிரியர்களின் பங்களிப்பு எழுத்துப் பிழைகளைச் சரி பார்ப்பது மட்டுமே என்றும் தெரிய வருகிறது. இந்தநிலை மாற்றப்பட வேண்டும். தமிழ் வரலாற்று பாடநூல்களை தயாரிப்பதற்கென தகுதிவாய்ந்த தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

அதே நேரம் எமது நாட்டில் இடம்பெற்றுள்ள உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மூடி மறைக்காமல் – திரிபு படுத்தாமல் பாடநூல்களில் உள்ளடக்கப்பட வேண்டும். தமிழர்களின் பண்டைய இருப்பை வெளிப்படுத்தக்கூடிய ஆட்சிகள், ஆட்சியாளர்கள் தொடர்பிலான விடயங்கள் எவையும் பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்களில் தெளிவாக இடம்பெறாமையானது பாரிய குறைபாடாகும். அத்தகைய குறைபாடுகளுடன்கூடிய வரலாறே எமது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் வளர்க்கப்பட வேண்டுமென்பதில் அக்கறை காட்டப்படுகின்ற இந்த ஆட்சியில் இந்த வரலாற்றுப் பாடத் திட்டமானது அதற்கெதிரான விளைவுகளையே கொண்டுதரக் கூடிய வகையில் அமையப்பெற்றிருக்கின்றன.

இவ்வாறான மூடி மறைப்புகள் – திரிபுபடுத்தல்கள் என்பன பாடசாலை பாடங்களின் ஊடாக எமது மாணவர்களுக்கு புகுத்தப்படுகின்ற நிலையில், எமது நாட்டு மாணவர்கள், இளம் சந்ததியினரிடையே தாங்கள் இந்த நாட்டிலிருந்தும் அந்நியப்பட்டவர்கள் என்ற எண்ணக் கருவே ஆழமாக மனதுள் பதிந்துவிடுகின்றது. இவ்வாறான உணர்வுகளுடன் வளரும் எமது இளம் சந்ததியினரிடையே நாட்டுப் பற்றினையும், தேசிய நல்லிணக்க சிந்தனைகளையும் எதிர்பார்க்க இயலாது.

இந்த நாட்டு மக்களிடையே மேலும், மேலும் கசப்புணர்வுகளை வளர்க்கும் முகமாகவே இவ்வாறான பாடத் திட்டத் தயாரிப்புகள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. இது மிகுந்த அவதானத்தைச் செலுத்த வேண்டிய விடயமாகும். எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை பலமிக்கதாகக் கட்டியெழுப்ப வேண்டுமானால், அனைத்துத் தரப்பு மக்களும் அதை உளப்பூர்வமாக ஏற்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். சிங்கள மாணவர்கள் இந்நாட்டின் தமிழர் மற்றும் ஏனைய இனத்தவர் பற்றிய வரலாற்றையும், பண்பாட்டையும், தமிழர் மற்றும் ஏனைய இனத்தவர் சிங்கள மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ள வழியேற்படுத்த வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts